நாய்களை வளர்ப்பதன் தொடர்பாக அல்குர்ஆனில் எந்த ஒரு தடையும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக அல்குர்ஆன் நாய் வளர்ப்பதை அனுமதிக்கிறது. உஸ்தாஸ்கள், ஆலிம்கள் என்று தங்களை கூறிக் கொள்பவர்கள்தான் நாய்களை வளர்ப்பதை தடை செய்கிறார்கள்.

நாய்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவை போன்ற ஒரு விம்பம் இருப்பதால், சிலர் நாய்களை துன்புறுத்துகிறார்கள், கொள்கிறார்கள். இது மிகப் பெரிய பாவம். இதற்கு கடுமையான தண்டனை நிச்சயம் உண்டு.

ஹதீஸ்களில் நாய் வளர்க்கக் கூடாது என்று இருப்பதாக கூறுகிறார்கள். அல்குரான் அனுமதித்த பிறகு எதற்காக ஹதீஸை பின்பற்ற வேண்டும்?. அல்குரனை விடவா ஹதீஸ் உயர்ந்தது?.

உலக அரசியலை புரிந்துக்கொள்ளுங்கள்
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, ஏதோ ஒரு இயக்கம். அல்லது ஒரு குழு முஸ்லிம்களை, கொல்வதற்கும், அடிமைப் படுத்துவதற்கு, நாய்கள் தடையாக இருக்கும் என்று அறிந்துக் கொண்டு. திட்டமிட்டு நாய்களை, ஹராம் நஜிஸ், என்று பரப்பி விட்டிருக்கிறார்கள். அல்குர்ஆனை ஆராய்ச்சி செய்யாத மக்களும், முட்டாள் தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள், பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் முஸ்லிம்கள், கொல்லப் படுவதையும், துன்புறுத்தப் படுவதையும், வேதனைபடுத்தப் படுவதையும், அடிமையாக்கப் படுவதையும், நீங்கள் அனுதினமும் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கலாம். அவற்றில் காட்டபடுபவை குறைவானவை மட்டுமே, நம் அறிவுக்கு எட்டாமல் அதிகமாக நடக்கிறது.

சற்று சிந்தித்துப் பாருங்கள், இந்த வேதனைகளை அனுபவிக்கும் முஸ்லிம்கள் நாய்களை வளர்த்திருந்தால். கொல்லப்பட்ட, ஊனமான, துன்புறுத்தப்பட்ட, முஸ்லிம்களில் பாதி பேர்களாவது காப்பாற்ற பட்டிருப்பார்கள். உண்மையா இல்லையா?. தன் உறவினர் துன்பப்படும்போது, மனிதர்கள் வேண்டுமானால் பயத்தினால் ஒதுங்கி நிற்களாம், நாய்கள் நிற்குமா?. தன் உயிர் இருக்கும் வரையில் காத்து நிற்காது?. அதனால்தான் இஸ்லாமியர்களுக்கு நாய்கள் தடை. 

உங்களை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
அப்கானிஸ்தான், பாலஸ்தீன், சிரியா, பங்களாதேஸ், மியன்மார், அவ்வளவு ஏன் நம் பக்கத்து மாநிலங்களில் எத்தனை முஸ்லிம்கள் கொல்லப் படுகிறார்கள். எத்தனை முஸ்லிம்கள், உடமைகளை இழந்து, உரிமைகளை இழந்து, மானம் இழந்து அலைகிறார்கள். அவர்களை ஏன் மலக்குகள் வந்து காப்பாற்றவில்லை?. அவர்களுக்கு உதவாத மலக்குமார்கள் உங்களுக்கு வந்து உதவுவார்கள் என்று இன்னும் நம்புகிறீர்களா?.

இந்த நம்பிக்கை தான் உண்மையான ஈமான் என்று சிலர் வாதிடுவார்கள். இது நம்பிக்கையல்ல, மூட நம்பிக்கை என்கிறேன் நான். உங்களுக்கு உதவிக்கும் பாதுகாப்புக்கும் இறைவன் நாய்களை படைத்து துணைக்கு அனுப்பி விட்டான். அதை வளர்க்காமல் மேலேயே பார்த்துக் கொண்டிருப்பது உங்கள் தவறுதான்.

மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. (Ad-Dukhaan: 38)

எல்லா ஹதீஸ்களும் உண்மையல்ல
ஹதீஸ்களின் பெயரால் முஸ்லிம்கள் முட்டாள்கள் ஆக்கப்படுகிறார்கள் என்பது எனது கருத்து. நாய் வளர்ப்பது உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும், உங்கள் வீட்டுக்கும், மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத, வருவாரா இல்லையா என்று தெரியாத,  மலக்குகள் வரமாட்டார் என்ற வெறும் நம்பிக்கையின் அடிபடையில், நாய்களை ஒதுக்குவது உங்கள் சொத்துக்கும், உயிருக்கும் ஆபத்தாக முடியும்.

நாய்கள் வளர்த்தால் மலக்குகள் வர மாட்டார்கள், இதுதானே பெரும்பாலானோர் கூறும் காரணமாக இருக்கிறது?. அப்படி என்றால் நாய் வளர்க்காத்தவர்கள் வீடுகளில் மலக்குகள் வந்து ஆபத்துகளில் உதவுகிறார்களா?. அவ்வாறான உதவிகளை பெற்றவர்கள் யாராவது உண்டா?.

நாய்களை வளர்க்காத முஸ்லிம்களின் வீடுகளில் கொள்ளை, கொலை, கற்பழிப்பு, போன்ற கெட்ட விஷயங்கள் நடக்காமல் மலக்குகள் தடுக்கிறார்களா? அல்லது யாரையாவது மலக்குகள் வந்து காப்பாற்றி இருக்கிறார்களா?.

ஆனால் நாய்களை வளர்த்திருந்தால், கண்டிப்பாக அவை காப்பாற்ற முயற்சிகளை செய்திருக்கும்.

எதையும் அப்படியே நம்பாதீர்கள், சிந்தியுங்கள்
அல்குர்ஆனில் பலமுறை ஒலிக்கும் ஒரு வசனம், நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? சிந்திக்கும் சமுதாயமாக மாற மாட்டீர்களா? என்பதுதான். சிந்திக்க சொல்லி அல்குர்ஆன் தூண்டுகிறது, சிந்திக்கக் கூடாது, நபியை எதிர்த்து ஹதீஸை எதிர்த்து, அல்குர்ஆனை எதிர்த்து கேள்விகள் கேட்கக் கூடாது என்று நமது ஹஜ்ரத்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.

நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா? (As-Saaffaat: 155)

முஸ்லிம்களே வீட்டுக்கு இரண்டு நாய்களை வளர்க்க தொடங்குங்கள்
நாட்டு நாய்களை வளர்க முயற்சி செய்யுங்கள், நாட்டு நாய்கள் மட்டும்தான் விசுவாசமாக யாருக்கும் அஞ்சாமல், தன் உயிரைக் கொடுத்து எஜமானனை பாதுகாக்கும். அழகுக்காக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நாய்களை வாங்குவதும் வளர்ப்பதும் வீண் வேலை.

(நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை (நாய்கள்) வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்;. எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன். (Al-Maaida:4)

அல்குர்ஆனை பின்பற்றுகிறீர்களா? அல்லது மனிதர்களை பின்பற்றுகிறீர்களா? முடிவு உங்கள் கையில் தான் உள்ளது.

ஒரு வேட்டை நாய் பிடித்து வரும் விலங்கை உண்ணலாம் என்றால், நாய் வளர்க்காமல் அதை செய்ய முடியுமா?. நாய்களை வளர்க்கக் கூடாது என்றால் இந்த வசனத்தை அல்லா இறக்கிவைக்க தேவையே இல்லையே.

இந்தக் கட்டுரையை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை. மக்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது. சிந்தியுங்கள்.

ஒரு உறவு, காதலா காமமா என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு இந்த இயற்கையின் அமைப்பு எவ்வாறு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். இயற்கையின் வேலை என்னவென்றால், இந்த உலகில் வாழும் உயிர்கள் அழிந்து விடாமல் பாதுகாப்பது. உயிர்கள் அழியக் கூடாது என்றால் இனம் உற்பத்தியாகிக் கொண்டே இருக்க வேண்டும். இன உற்பத்திக்காகவே ஆண்களுக்கு பெண்கள் மீதும் பெண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. இது இயற்கையின் அமைப்பு.

இந்த இனக் கவர்ச்சி தொடருமேயானால் அது காதலாகும், காரியம் முடிந்ததும் கரைந்து விடுமானால் அது காமமாகும். ஒரு காதல் உண்மையானதா பொய்யானதா? அது காதலா காமமா? என்ற வித்தியாசம் தெரிய வேண்டுமென்றால், அந்தப் பெண்ணிடம் நீங்கள் எதை பார்க்கிறீர்கள் என்பதுதான் பதிலாகும்.

ஒரு பெண்ணின் முகத்தையோ, குணத்தையோ, செயல்பாடுகளையோ, பார்த்து ஆசை வந்தால், அது காதலாக நிலைத்து இருக்க வாய்ப்பிருக்கிறது. உடலையோ, உடல் உறுப்புகளையோ, தோளையோ, அழகையோ பார்த்து ஆசை வருமானால் அது காமம் எந்த நேரத்திலும் மறைந்து போகலாம்.


திருமணத்திற்குப் பின் ஒரு ஆணும் பெண்ணும் எவ்வாறு பழக வேண்டும்?. ஒரு ஆண் பெண் இணையும் உறவிற்கு திருமணம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் ஏனென்றால், அங்கு இணைவது இரண்டு உடல்கள் அல்ல இரண்டு மனங்கள்.

எங்கேயோ பிறந்து எப்படியோ வளர்ந்த இருவர், மனதால் இணைந்து மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கு நடத்தப்படும் ஒரு நிகழ்வே திருமணம். இந்த உறவு தொடர்வதற்கும் மகிழ்ச்சியாக அமைவதற்கும் சில டிப்ஸ்.

1. கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்க முதல் நிபந்தனை என்னவென்றால், கணவன் மீது மனைவிக்கோ, மனைவி மீது கணவனுக்கோ எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது.

2. கணவனோ மனைவியோ தன் ஜோடி எப்படி இருந்தாலும், உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

3. என் கணவன் ஏன் அப்படி இல்லை, ஏன் அவர் போல் இல்லை, ஏன் இவர் போல் இல்லை என்று மனைவியோ. என் மனைவி ஏன் அந்த பெண் போல் இல்லை, இந்த பெண் போல் இல்லை, என்று கணவனோ நினைக்கக் கூடாது.

4. கணவன் மனைவி என்று இணைந்த பிறகு, கணவன் அல்லது மனைவியின் கடந்த கால வாழ்க்கையை பற்றி கேட்கக்கூடாது.

5. திருமணமாவதற்குமுன் அவர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், என்ன குணாதிசியங்கள் இருந்தாலும், அதை மறந்து மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

6. கணவனோ மனைவியோ எந்த காரணத்தைக் கொண்டும் தன்னுடைய கடந்த கால கசப்பான அல்லது தவறான செயல்கள் எதையுமே கணவனிடமோ மனைவியிடமோ கூறக்கூடாது.

கடந்த கால வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று நான் கூறுவதற்குக் காரணம்; நீங்கள் கூறும் அந்த ஒரு நிகழ்வை உங்கள் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் செய்து விட வாய்ப்பிருக்கிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் உங்கள் கணவனையோ மனைவியையோ எந்த ஒரு நபருடனும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருந்தால்; உங்கள் மகிழ்ச்சி எந்த காலத்திலும் குறைய வாய்ப்பே கிடையாது.

கணவன் மனைவி விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்று கூறுவார்கள், அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. கணவன் மனைவி என்பவர்கள் விட்டுக் கொடுத்து வாழ கூடாது, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும். இதுதான் என் மனைவியின் குணம், இதுதான் என் கணவரின் குணம் என்ற தெளிவு இருந்தால்; அந்த உறவு எல்லா காலத்திலும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.


குறிப்பிட்ட வயதை தாண்டியதும் பெரும்பாலானோரின் மனதில் தோன்றும் கேள்வி, நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? நான் ஏன் இந்த மனித பிறவி எடுத்தேன்? நான் ஏன் இந்த உலகுக்கு வந்தேன்? நான் எங்கிருந்து வந்தேன்? என்னை யார் படைத்தது?. பலருக்கு இவ்வாறன கேள்விகள் எழுந்துக்கொண்டே இருக்கும்.

இந்த கேள்விகளுக்கு தர்க்க ரீதியாக பல பதில்கள் சொல்லலாம். மத ரீதியாக பல பதில்கள் சொல்லலாம். அறிவு ரீதியாகவும் பல பதில்களை சொல்லலாம். யார் என்ன பதில் சொன்னாலும் எனக்கு பிடித்த பதில் என்பது. நான் மனிதனாக வாழப்பிறந்தேன், மனித பிறவி என்றால் என்னவென்ற அனுபவத்துக்காக பிறந்தேன், அவ்வளவுதான்.

நீ மனிதன் அல்ல, நீ இந்த உடல் அல்ல, நீ இந்த மனம் அல்ல, நீ ஒரு ஆத்மா, நீ அது, நீ இது என ஆளுக்கு ஒரு கருத்து சொல்வார்கள், அது உண்மையாக கூட இருக்காலாம், ஆனால் அந்த உண்மை அவர்களுக்குத்தான், உங்களுக்கு அல்ல. உங்களைப் பொறுத்த வரையில், உங்கள் அனுபவத்துக்கு, உங்கள் அறிவுக்கு எட்டியது, நீங்கள் ஒரு மனிதர் அவ்வளவுதான். அதுக்கு மேல் என்னவெல்லாம் நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலும் அது வேறு ஒருவரால் உங்களுக்குள் திணிக்கப்பட்டவை. அவை பெரும்பாலும் உங்களின் சொந்த அனுபவங்கள் அல்ல.

தன்னை அறிவது எவ்வாறு?
ஆன்மீகத்தில் வளர்வதற்கும், தன்னை அறிவதற்கும் முதல் அடிப்படை தகுதி, எனக்கு ஒன்றும் தெரியாது என்று உணர்ந்து ஒப்புக்கொள்வது. எவன் ஒருவன் தன் மனதில் தன்னைப் பற்றிய எந்த ஒரு முன் முடிவோடு இருந்தாலும் அவன் ஆறாய் ஓடி கடலை அடைய முடியாமல், குட்டையாய் தேங்கிவிடுவான்.

மனித பிறப்பு பற்றி அடுத்தவர் சொன்னது, புத்தகத்தில் படித்து என அனைத்தையும் மறந்து,  மனதை வெற்று காகிதமாக வைத்துக் கொள்ளுங்கள். காலம் அதில் அழகிய ஓவியங்கள் வரையும். வெறும் கோப்பையுடன் காத்திருங்கள், காலம் அதில் சுவையான தேநீர் ஊற்றும்.

ஆன்மீகத்தில் மிக முக்கியமான தகுதியே, காத்திருத்தல்தான். காத்திருங்கள், வெற்று காகிதத்தோடும், வெற்று கோப்பையோடும். நேரம் கனியும் போது இயற்கை அவற்றை நிரப்பிவிடும்.


அவன் சொர்கத்துக்கு போகிறான் இவன் நரகத்துக்கு போகிறான் என்று சொர்க்கத்தின் காவலாளிப் போன்று பேசும், சிலருக்கும் மற்றும் பாவ விமோசனம் பரிகாரம் என்று மக்களை ஏமாற்றும் சிலருக்கும் இந்த பதிவு.

அனைவரும் ஒன்றை தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள் நீங்களும் மனிதர்கள்தான். யார் செய்வது சரி, யார் செய்வது தவறு என்று முடிவு செய்யும் உரிமை உங்களுக்கு கிடையாது. அதைப் போன்றே நீங்கள் நம்பிக்கை கொண்டது உங்களுக்கு சரி என்றால், மற்ற மதத்தினர் நம்பிக்கை கொண்டதும் அவர்கள் வரையில் சரியே. நான் இதை நம்புகிறேன் அதை நம்பிக்கை கொள்ள மறுக்கிறேன் அதனால் நீங்களும் என்னைப் போன்றே நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று சொல்வது முட்டாள் தனம் மட்டுமே.

ஒரு நம்பிக்கையை ஏற்றுக்கொண்டால் அல்லது ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டால் பாவங்கள் மன்னிக்கப்படும், எளிதாக சொர்க்கம் செல்லலாம் என்பதெல்லாம் அரசியல் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க கொடுக்கப்படும் சாராயமும் பிரயாணி பொட்டலமும் போன்றதுதான். மதத்துக்கு ஆள் சேர்க்க தூண்டப்படும் ஆசை.

யார் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றுங்கள் அது உங்கள் உரிமை ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மதமே சம்மதித்தாலும் இயற்கைக்கு மாறாக மற்றும் மற்ற உயிர்களுக்கு தீங்கை விளைவிக்கும் வகையில் எதையுமே செய்யாதீர்கள்.

அந்த மதத்தில் இருந்தால் பாவங்கள் மன்னிக்கப்படும், இந்த மதத்தில் இணைந்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதெல்லாம் வெறும் பொய் மட்டுமே. ஒரு மனிதன் 10 நன்மைகள் செய்து 5 தீமைகள் செய்தான் என்றால், அவன் 10 நன்மைக்கான பலனை அனுபவித்து 5 தீமைக்கான பலனை அனுபவிப்பானே ஒழிய 10 நன்மைகளில் இருந்து 5 பாவங்களை களித்துக்கொண்டு மீதும் 5 நன்மைகளை மட்டும் அனுபவிப்பது இல்லை. ஒரு மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய பலன் நிச்சயமாக கிடைக்கும். அது யாராக இருந்தாலும் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் சரியே. இறைவன் பாராபட்சம் பார்ப்பதில்லை.

சில மதங்களில் பாவ மன்னிப்பும் வழங்குவதும், சில மதத்தை பின்பற்றினால் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறுவதற்கும் காரணம் என்னவென்றால், மனிதன் தவறுகள் செய்யும் இயல்புடையவன் இதுவரையில் செய்த பாவங்கள் போதும் இனிமேல் திருந்தி வாழ அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற நோக்கத்தில் தான் பாவ மன்னிப்பு என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது. உண்மையில் யாரும் எந்த தப்பிலிருந்தும் தப்பிக்க முடியாது. தண்டனை நிச்சயமாக கிடைக்கும். வாழ்க்கையில் துன்பங்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமா? பாவம் செய்யாமல் இருங்கள்.

பாவத்துக்கும் சாபத்துக்கும் விமோச்சனம் தருகிறேன் பரிகாரம் செய்யலாம் என்பதெல்லாம் சுத்த அபத்தமே. பாவங்களுக்கு ஒரே பரிகாரம் திருந்தி வாழ்தல் மட்டுமே. திருந்தி வாழ்ந்து புதிய பாவங்கள் செய்யாமல் இருந்தால் தண்டனை குறையலாம் மற்றபடி தண்டனையை தவிர்க்க முடியாது.


தியானத்தில் இருக்கும் போது, பல வகையான உணர்வுகளை தியானம் செய்பவர்கள் அனுபவிப்பார்கள். அந்த அனுபவங்களைத்தான் தியான நிலை என்று பலர் எண்ணுகிறார்கள். நானும் தியானத்தின் போது பலவகையான அனுபவங்களை அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவங்களை கொண்டு நான் எதையோ சாதித்து விட்டேன், நான் எதையோ அடைந்து விட்டேன் என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். பின்புதான் உணர்ந்து கொண்டேன் என் அனுபவங்கள் அனைத்தும் என் மனதால் உருவாக்கப்பட்ட கற்பனைகள் என்று.

தியானத்தை பற்றி பேசுபவர்களுக்கு கூட உண்மையான தியான நிலை என்பது எப்படி இருக்கும் என்று தெரியுமா என்பது சந்தேகமே. தியான நிலையை விளக்கும் அளவுக்கு எனக்கு தெளிவு கிடையாது ஆனாலும் நான் உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

தியானத்தின் போது தியானம் செய்பவர்கள் அனுபவிக்கும், எண்ணங்கள், உணர்வுகள், அவர்கள் செவிமடுக்கும் ஓசைகள், காணும் காட்சிகள் அனைத்தும் அவர்களின் கற்பனைகள் மட்டுமே. அவை எதுவும் உண்மை கிடையாது. அதனால் தியானத்தில் கிடைக்கும் உணர்வுகள், எண்ணங்கள், மற்றும் காட்சிகளை கண்டு மகிழ்ச்சி அடையவும் தேவையில்லை, பயப்படவும் தேவையில்லை. தியானத்தின் போது கடவுளை கண்டாலும் பேயை கண்டாலும் இரண்டுமே கற்பனைதான்.

தியானம் என்பதே எண்ணங்கள் அற்ற நிலைக்கு செல்லும் ஒரு வழிமுறைதான். எண்ணங்களின் குவியலான மனமானது செயல்படாமல், புதிய எண்ணங்கள் உருவாகாமல், நாம் நம்மோடு தனித்திருக்கும் நிலைதான் தியானம். அந்த தியான நிலையில் நாம் மட்டுமே இருக்க வேண்டும், நம்மை தவிர நம்முடன் எது இருந்தாலும் அது நமது கற்பனை மட்டுமே.

சரி உண்மையான தியான நிலை எப்படி இருக்கும்?. சில எடுத்துக்காட்டுகள் சொல்கிறேன். இரயில் தண்டவாளத்தின் அருகில் இருக்கும் போது ஒரு இரயில் நம்மை கடந்து சென்றால், இரயில் கடந்து சென்ற பின்பாக ஒரு அமைதி உருவாகுமே அதுதான் தியானத்தின் நிலை. சினிமாவிலோ, கூட்டத்திலோ, சாலைகளிலோ இருக்கும் போது, ஒரு இரைச்சலான சத்தம் உருவாகி, அந்த சத்தம் ஓயும்போது ஒரு அமைதி நிலவுமே அதுதான் தியான நிலை.

அந்த அமைதிதான், அந்த சூழ்நிலைதான் மனிதனின் உண்மையான சுயநிலை.  அந்த அமைதியை அடைவதுதான் தியானத்தின் நோக்கம். அந்த அமைதியை அடைவதுதான் தியான நிலை. அந்த அமைதியில் நிலைத்திருப்பதுதான் சமாதி நிலை. சம + ஆதி, அதாவது ஆதி பரம்பொருளுடன் நிலைத்திருக்கும் நிலை.

மணி கணக்காக தியானம் செய்ய தேவையில்லை, ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் இந்த நிலையை அடைந்து விடுங்கள் அது போதும். தியானம் செய்ய தொடங்கிய உடனே இந்த அமைதி நிலையை அடைந்து விட முடியாது, பல வருடங்கள் ஆகலாம். ஆனால் இந்த அமைதி நிலையை, தியான நிலையை அடைய எந்த முயற்சியும் செய்யாதீர்கள், செய்யவும் தேவையில்லை. அமைதியாக அமர்ந்து எண்ணங்கள் கவனிக்க தொடங்குங்கள். மற்றவை அனைத்துமே சுயமாக நடக்கும்.

வாழ்க வளமுடன்

மரணத்துக்கு பின்பு என்ன நடக்கப்போகிறது என்பதுதான் பலரின் கவலையாக
இருக்கிறது; குறிப்பாக முதியவர்களுக்கு. மரணத்துக்கு பின்பு சுவர்க்கம், நரகம், மறுபிறப்பு, இயற்கையோடு இணைதல் என்று ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு நம்பிக்கைகள் உள்ளது. மரணம் என்றால் என்ன மரணத்துக்கு பின்பாக என்ன நடக்கும் என்பன விசயங்கள் புரியாததால் பலருக்கு மரணம் என்றாலே உள்ளுக்குள் நடுக்கம் ஏற்படுகிறது. மரணம் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க துணிவதில்லை.

மரணத்துக்கு பின்பான மனிதனின் வாழ்கையை புத்தமதத்தின் நம்பிக்கைகளில் இருந்து பார்ப்போம்.

இந்தியாவில் தோன்றிய சைவம், வைணவம், பௌத்தம், சமணம், சீக்கியம், மற்றும் ஹிந்து மதங்களுக்கிடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. குறிப்பாக மனிதனின் ஆன்மாக்கள் மறுபிறப்பு எடுக்கும் என்பதை இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களும் ஒப்புக்கொள்கின்றன. மனிதர்களின் வாழ்க்கை ஒரு முறைதான் என்பதையும், மரணத்துக்கு பின்பு நேரடியாக சுவர்க்கம் அல்லது நரகம் செல்வார்கள் என்பதை இந்த மதங்கள் ஒப்புக்கொள்வதில்லை.

ஆன்மாக்கள் தங்களின் கர்ம கணக்குகள் முடியும் வரையில் மீண்டும் மீண்டும் பிறந்துக்கொண்டே இருக்கும் என்பது மேலே குறிப்பிட்ட மதங்களின் நம்பிக்கையாகும். இந்த மதங்களை பின்பற்றும் பலர் பாவம் செய்தவர்கள்தான் மீண்டும் பிறப்பு எடுப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருகிறார்கள். இது ஒரு தவறான  நம்பிக்கையாகும். 

ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க தூண்டுவது அவை செய்த கர்மாக்கலாகும். கர்மா என்றால் செயல்கள் என்றுதான் பொருளாகும். ஒருவர் செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டுமே பிறப்பெடுக்க காரணமாக இருக்கும். ஒரு ஆன்மாவின் பிறப்பு, குடும்பம், வாழ்க்கைமுறை, அறிவு, ஆரோக்கியம், செல்வம், உறவுகள், போன்றவை அந்த ஆன்மாவின் முந்தைய பிறப்பின் தொடர்ச்சியாக இருக்கும்.

ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பு எடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன, அவற்றில் முக்கியமான ஒரு காரணம் கர்ம கணக்கை நிவர்த்தி செய்வதற்காக. கர்ம கணக்கை அனுபவிக்க பிறப்பு எடுப்பதால்தான் சிலர் ஏழைகளாகவும், சிலர் வசதி படைத்தவர்களாகவும், சிலர் ஆரோக்கியமாகவும், சிலர் ஊனமாகவும், பிறக்கிறார்கள்.

உழைக்காதவர்களும், எந்த திறமையும் இல்லாதவர்களும், எந்த முயற்சியும் செய்யாதவர்களும், மடையர்களும் வசதியாக வாழ்வதற்கும். சிலர் என்ன படிச்சாலும், என்ன திறமை இருந்தாலும், என்னதான் முயற்சி செய்தாலும் வாழ்கையில் தோல்விகளும் துன்பங்களும் உண்டாவதற்கும். சிலர் பிறக்கும் போதே செல்வ செழிப்போடு பிறப்பதற்கும், சிலர் பிறக்கும் போதே பெற்றோர்களை இழப்பதற்கும், வறுமையில் வாடுவதற்கும் கர்மா தான் காரணம். அந்த குறிப்பிட்ட ஆன்மா முந்தைய பிறவிகளில் செய்தவற்றின் பலனாகத்தான் இந்த வாழ்க்கை அமைந்துள்ளது.

ஆன்மாக்களின் பரிமாண வளர்ச்சி
ஆன்மாக்கள் தொடக்கத்திலேயே மனித பிறப்பு எடுப்பதில்லை. ஆன்மாக்களின் வாழ்க்கை என்பது ஒரு பயிற்சியாகும், மரணமில்லா பெருவாழ்வுக்கான பயிற்சியாகத்தான் இந்த உலக வாழ்க்கை கருதப்படுகிறது. அதனால் இந்த பூமியில் தோன்றும் ஆன்மாக்கள் தொடக்கத்திலேயே, பூமியின் உயரிய பிறவியான மனித பிறப்பு எடுக்காமல்; ஒரு அறிவு உயிராக தன் வாழ்கையை தொடங்குகிறது. பிறப்பு இறப்பு என்பது உயிரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பரிமாணமே ஒழிய, மரணம் என்பது ஒரு முடிவு கிடையாது.

இன்று மனித வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஆன்மாக்கள் தொடக்கத்தில் ஒரு அறிவு ஜீவனான தாவரங்களாக, தங்கள் பிறவியை தொடங்கின; அதிலும் தாவரத்தில் மிக சிறிதான புல்லினத்தில் இருந்து. ஒரு அறிவு உடைய தாவரங்களில் அனைத்து வகையான பிறவிகளையும் பிறந்து அனுபவப்பட்டும் பின்பு அடுத்த நிலை பிறப்பான இரு அறிவு உயிராக அதாவது புழு, பூச்சி மற்றும் வண்டுகளாக பிறவி எடுக்கின்றன, இரு அறிவு பயிற்சி முடிந்த பின்பு,  மூன்று அறிவு ஜீவனாக பிறவி எடுக்கின்றன. இந்த சுழற்சி இறுதியில் ஆறு அறிவு ஜீவனான மனிதனில் பூர்த்தி அடைகிறது.

மனித பிறவி எடுத்த ஆன்மாக்களுக்கு மட்டுமே பகுத்தறிவான ஆறாவது அறிவு கொடுக்கப்படுகிறது. பகுத்தறிவு கொடுக்கப்பட்டதால் மனிதர்களுக்கு மட்டுமே பாவ புண்ணிய கணக்குகள் உள்ளன. மனிதர்களை தவிர்த்து மற்ற உயிரினங்களுக்கு சரி தவறு மற்றும் பாவம் புண்ணியம் என்ற எந்த அளவுகளும் கிடையாது.

மனித பிறவி என்பது விலங்கு பிறப்பின் தொடர்ச்சியாக இருப்பதால்தான் சில மனிதர்களுக்கு விலங்குகளின் குணம் மீதம் இருக்கிறது. நம்மை சுற்றியே விலங்குகளின் குணமுடைய பல மனிதர்களை பார்க்கலாம். அவ்வளவு ஏன் நமக்கு கூட விலங்குகளின் சில குணங்கள் மிச்சம் இருக்கலாம்.

மரணத்துக்கு பின்பு மனிதனின் நிலை
ஒரு உடல் சீர்கெட்டு போனாலோ, விபத்தால் சிதைந்துப் போனாலோ, நோய்வாய்ப்பட்டு கெட்டுப் போனாலோ, முதுமையினால் சிதைந்தாலோ, உயிர் இனி இந்த உடலில் வாழ வழியில்லாமல் போகும்போது; உயிர் அந்த உடலை விட்டு பிரிந்துவிடும்.

உடலை துறந்த உயிர் ஆன்ம லோகத்துக்கு செல்லும். அங்கு அந்த ஆன்மாவின் பாவ புண்ணிய கணக்குகள் சரிபார்க்கப்பட்டு அந்த ஆன்மா இந்த பூமியில் செய்த செயல்களுக்கு ஏற்ப அடுத்த பிறவி கொடுக்கப்படும். அடுத்த பிறப்புக்கான சூழ்நிலை அமையும் வரையில் அந்த ஆன்மாவானது ஆன்ம லோகத்திலேயே தங்கியிருக்கும். ஒரு ஆன்மா இந்த பூமியில் செய்த செயல்களுக்கு ஏற்ப சொர்கத்திலோ, நரகத்திலோ, ஆன்ம லோகத்திலோ, மற்ற கிரகங்களிலோ அல்லது மீண்டும் இந்த பூமியிலேயோ வாழ நேரிடும்.

இந்த பூமியில் மறுபிறப்பு எடுத்த உயிர்கள் மீண்டும் மனித பிறப்பு தான் எடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. அந்த ஆன்மாவின் பக்குவம் மற்றும் செயல்களுக்கு ஏற்ப மனித பிறவி அமையலாம். அல்லது மீன், பறவை, விலங்குகள் போன்ற பிறவிகளும் அமையலாம், அந்த ஆன்மாவின் பக்குவத்தை பொறுத்து அடுத்த பிறவிகள் அமையும். விலங்குகளாக பிறவி எடுத்த மனித ஆன்மாக்கள் அடுத்த பிறவியில் மீண்டும் மனித பிறவி எடுக்க வாய்ப்புகள் உள்ளன.

விலங்குகளில் அறிவுக்கு மீறிய அறிவும் ஆற்றலும் உடைய விலங்குகளை பற்றியும், மனிதர்களுடன் நெருங்கி பழகும் விலங்குகளை பற்றியும், நாம் படித்திருப்போம் அல்லது கேள்விப் பட்டிருப்போம். இதற்கு காரணம் அந்த விலங்குகள் முந்தைய பிறவிகளில் மனித பிறவி எடுத்ததாக கூட இருக்கலாம்.

இப்போது தீய செயல்களை செய்யும் மனிதர்களும், மற்ற மனிதர்களை கெடுத்து, ஏமாற்றி வாழும் மனிதர்களும், அடுத்த மனிதர்களுக்கு துரோகம், வஞ்சகம் செய்பவர்களும் அடுத்த பிறவியில் விலங்குகளாக, அதுவும் அழுக்கில் வாழக்கூடிய விலங்குகளாக பிறக்கக் கூடும் என்று புத்த மதம் கூறுகிறது. கௌதம புத்தர் 600,000 ஆண்டுகளாக பல்வேறு பிறவிகள் இந்த பூமியில் எடுத்ததாகவும், நிர்வாணா என்ற முக்தி நிலை அடைந்து பிறவி சுழற்சியில் இருந்து விடுப்பட்டதாகவும் கூறுகிறார்.

மறுபிறவி என்று ஒன்று இருந்தால் அதிலிருந்து விடுப்படும் வழிமுறை என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா?. இந்த வாழ்கையில் எந்த பற்றுதலும் இல்லாமல் வாழ்பவர்களுக்கு அடுத்த பிறவி அமைவதில்லை.

பிறப்பு இறப்பு பற்றிய மற்ற விவரங்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.